திங்கள், 17 ஜனவரி, 2011

அதிர வைத்த `அமைதியின் நறுமணம்’

`அமைதியின் நறுமணம்’ என்ற இரோம் ஷர்மிலாவின் கவிதை தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இரண்டு காரணங்களுக்காக.     
1) ஷர்மிலா கவிதை எழுதுவரா? என்ன எழுதியிருக்கிறார் என்று அறியும் ஆவல். 2) எனக்கு பிடித்த எழுத்தாளர் அம்பை ஷர்மிலாவின் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.


இரோம் ஷர்மிலா நான் மிகவும் மதிக்கும் ஒரு பெண்மணி. அவரது ஆளுமையும், மன உறுதியும், போராட்ட குணமும் பிரமிக்க வைக்கின்றன. மணிப்பூரைச் சேர்ந்த இவர், கடந்த பத்தாண்டுகளாக, நவம்பர் 4 , 2000 - முதல், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு இவரைப் பற்றி வாசித்திருந்தாலும், கவிதா ஜோஷியின் `Tales from the Margins ' என்ற ஷர்மிலாவைப் பற்றிய ஆவணப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசப் பெண்கள் திரைப் பட விழாவில் பார்த்ததை மறக்க முடியாது. இந்தப் படமும், கவிதா ஜோஷியுடனான உரையாடலும் ஷர்மிலாவின் முழுப் பரிமாணத்தை உணர்த்தியது.

யாரிந்த ஷர்மிலா? பத்தாண்டுகளாக உண்ணாவிரதப்    போராட்டம் ஏன்?

பதில்களுக்கு போகும் முன், மணிப்பூரில் நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958 – இந்த சட்டம் அங்குள்ள இராணுவப் படைகளுக்கு, கட்டுப்பாடில்லாத சிறப்பு அதிகாரங்களைத் தருகிறது. (Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958 – கலவரப் பகுதிகள் என்று கருதப்படும் பகுதிகளிலும், அரசியல் ரீதியாக சற்று கவனமாக நோக்க வேண்டிய பகுதிகளிலும் இராணுவப் படைகளுக்கு, கட்டுப்பாடில்லாத சிறப்பு அதிகாரங்களைத் தரும் சட்டம்.) இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர் காணாமல் போனாலும், இறந்து விட்டாலும் அழைத்து சென்ற இராணுவத்தினர் மீது சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் இடங்களில் காவலில் இருப்பவர்கள் இறப்பது, வன்புணர்ச்சி, சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதை நீக்க வேண்டும் என்றும் மணிப்பூர் மக்கள் போராடி வருகின்றனர்.

அப்பாவி மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கொடுமையான சட்டத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஷர்மிலா கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறார். இவரின் கோரிக்கை இன்று வரை அரசால் ஏற்கப் படவில்லை.

2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 -லில் மலோம் என்ற இடத்தில் குடிமக்கள் பத்து பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நவம்பர் 4 முதல் ஷர்மிலா உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். மணிப்பூர் அரசு கட்டாயமாக தந்த உணவை மறுத்துப் போராடினார். இதனால் தற்கொலை முயற்சிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உணவையோ நீரையோ உட்கொள்ள மறுத்து விட்டதால், அவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க மணிப்பூர் அரசு, அவர் மூக்கில் வற்புறுத்தி புகுத்தப் பட்ட குழாய் மூலம், வலுக்கட்டாயமாக திரவ உணவைத் தருகிறது. தொடர்ந்து அரசு காவலில் இருக்கும் அவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப் பட்டு உடனேயே திரும்பவும் கைது செய்யப் படுகிறார். தற்போதைய சட்டம், 12 மாதங்களுக்கு மேல் ஷர்மிலாவை சிறையில் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அதனால் தான் இந்த விடுவிப்பு சடங்கு.

பண்டைய மணிப்பூரின் மைதைலான் மொழியில் ஷர்மிலா எழுதிய 12 கவிதைகளை, லாய்ஃபுங்கம் தேபப்ரத ராய் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட, அதனை அம்பை தமிழாக்கம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கவிதைகளைப் படித்து முடித்தவுடன் மனம் கனத்துப் போனது.

தனியாகப் போராடும் ஷர்மிலாவின் ஏக்கங்கள், ஆசைகள், உணர்வுகளை கவிதைகள் பிரதிபலிக்கின்றன. நீர் பருகுவதும், பல் துலக்குவதும் நமக்கு சாதாரண விஷயங்கள்….. அவருக்கோ அது பெரிய ஏக்கம். ஷர்மிலாவின் சொல்லாடல்கள் நமக்குள் ஆழமாக ஊடுருவி மனதை கசிய வைக்கின்றன. இதில் அம்பையின் மொழியாக்கத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. (புத்தகக் கண்காட்சியில் அம்பையை நேரில் சந்தித்த போது, மொத்த நூலையும் நான்கு நாட்களில் மொழி பெயர்த்ததாகக் கூறினார்.)


`……மரியாதையுடன்

மானத்துடன்

வாழ விழைகிறேன்

என் விழிகள் நிரந்தரமாக மூடும் போது

என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும் போது

எனக்காக காத்திரு

என் அன்பே'



`இனிமேல் என்றும் எனக்கு சொந்தமில்லாத

என் அன்பு

கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது

காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது

என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்

ஏக்கம் மூள்கிறது…….."


என்ற கவிதைகளில் காதல் ததும்புகிறது.



`சிறை உலகை

என்னால் மறக்க முடியவில்லை

பறவைகள் சிறகடிக்கும் போது

விழிகளில் நீர் பொங்கும்

நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு

என்னும் கேள்வி எழும்

பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை

எனக் கூவத் தோன்றும்'



- என்று சிறை வாழ்க்கையின் அவலத்தைக் கூறுகிறார்.



`யாரையும் வெறுக்காமல்

யாரையும் உறுத்தாமல்

நாக்கை சரியாக அடக்கி

நான் வாழ்ந்து விடுகிறேனே

குழந்தை போல....

ஆசையில்லாத பூச்சி போல

திருப்தியுடன்

தன்னலமற்று'


- இயல்பாக வாழ விரும்பும் ஷர்மிலாவின் ஆசை வெளிப்படுகிறது.



`ஒரு பறவையைப் போல

அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து

வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி

மானுடத்தின் கானத்தைப் பாடவிடுங்கள்’

சுதந்திரத்தின் மீதான தாகம் மேலிடுகிறது இந்தக் கவிதையில்.

இந்த நூலில் பங்கஜ் பூடாலியா ஷர்மிலாவை எடுத்த பேட்டியும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. தன் போராட்டம் குறித்து அவர் கூறுகிறார் “நான் செய்யும் போராட்டம் கடவுளின் விருப்பம் என்ற நினைக்கிறேன். நான் இந்த போராட்டத்தின் பொறுப்பை ஏற்றிருப்பதால் அதை மனமார வரவேற்கிறேன். போராட்டத்தைத் தொடரும் ஆசை, அதற்கு என் சக்தியை அளிப்பது.... என் உயிரைத் தர வேண்டும் என்பது என்னைத் தொடர்ந்து செயல் பட வைக்கிறது”.

மன உறுதி என்றால் என்ன? எது போராட்ட குணம்? இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்கள் இரோம் ஷர்மிலாவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

12 கருத்துகள்:

மிருணா சொன்னது…

அரிதான மனுஷி குறித்த அருமையான பதிவு கீதா.. நீங்கள் தெரிவு செய்துள்ள அவரது வரிகள் அவரது மானுடப் போராட்டத்தின் பல்வேறு நிலைகளை சுட்டுகின்றன. Tales from the margin பார்த்தபோதே உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது, அந்த மக்களின் போராட்டத்துக்கான நியாயமும் தெரிந்தது.அந்த மக்களின் போராட்டத்துக்கான நியாயமும் தெரிந்தது. இப்போது உங்கள் பதிவு அந்த நினைவுகளை எழுப்புகிறது.

கீதா இளங்கோவன் சொன்னது…

நன்றி தோழி. ஷர்மிலாவைப் பற்றிய காட்சிகளைப் பார்க்கும் போதும், அவரைப் பற்றி வாசிக்கும் போதும் ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை தொற்றிக் கொள்கிறது.... பத்தாண்டுகளாக ஒரு மனுஷி உண்ணாவிரதம் இருக்கும் போது அதைப் பற்றிய எந்த சுரணையும் இல்லாமல் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறதே.... நானும் அதில் அடக்கம்.... குறைந்தபட்சம் வாய்ப்பு கிடைக்கும் போது அவரைப் பற்றி பேசி, எழுதி சமாதானப்படுகிறேன்....

Vishnu... சொன்னது…

அருமையான பதிவு தோழியே ...
நல்ல ஒருவரை பற்றி ..நல்ல ஒரு நோக்கத்திற்காக
அவர் எடுத்துக்கொண்ட இன்னல்கள் பற்றி படித்த போது மனம் குற்ற உணர்வில் ..

// `சிறை உலகை
என்னால் மறக்க முடியவில்லை
பறவைகள் சிறகடிக்கும் போது
விழிகளில் நீர் பொங்கும்
நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
என்னும் கேள்வி எழும்
பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
எனக் கூவத் தோன்றும்' //


வார்த்தைகள் இல்லை தோழியே ..

நல்ல ஒரு பதிவு .. நல்ல ஒரு உள்ளத்திற்கு நீங்கள் செய்திருக்கும் இத மரியாதைக்கு தலை வணங்குகிறேன் ..


அன்புடன்
விஷ்ணு ...

கீதா இளங்கோவன் சொன்னது…

உங்கள் வாழ்த்திற்கும் அக்கறையான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

sivakumar சொன்னது…

அருமையான பகிர்வு.உங்களுக்கு பாராட்டுக்கள். அவரைக் குறித்து அறிவது எனது கடமையாக இருக்கிறது. அந்த நூல் எங்கு கிடைக்கும் அல்லது வெளியீட்டாளர்கள் யார் என்று தெரிவிக்க முடியுமா? நான் சென்னையில் இல்லை அதனால்தான்.

கீதா இளங்கோவன் சொன்னது…

நன்றி தோழர். அம்பை தமிழில் மொழிபெயர்த்த ஷர்மிலாவின் கவிதைகளின் தொகுப்பான `அமைதியின் நறுமணம்' நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்கள் ஊரில் எங்கு கிடைக்கும் என்று நாகர்கோயிலில் இருக்கும் பதிப்பகத்தாரிடம் கேட்கலாம். தொலைபேசி எண் - 9677778863

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிகவும் அருமைடா கீது... அசந்து போய் விட்டேன்..

rvelkannan சொன்னது…

நல்லதோர் பகிர்வு .. நன்றி

கீதா இளங்கோவன் சொன்னது…

@Thenammai - நன்றி அக்கா

கீதா இளங்கோவன் சொன்னது…

@Vel Kannan - நன்றி நண்பரே

ஸாதிகா சொன்னது…

நல்ல பகிர்வு.லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

சீனி மோகன் சொன்னது…

அன்பு தோழிக்கு,
மனதைத் தொடும் பதிவு. காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மக்கள் அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட ராணுவத்துக்குத்தான் எல்லா அதிகாரமும். தமிழில் அய்ரோம் ஷர்மிலா என்று எழுத வேண்டுமா அல்லது இரோம் ஷர்மிலா என்று எழுத வேண்டுமா என்று எனக்கு சந்தேகம். உங்கள் பதிவை என் நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இவ்வளவு செறிவான மொழியுள்ள நீங்கள் ஏன் தொடர்ந்து பதிவிடுவதில்லை என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி.
சீனி மோகன்

கருத்துரையிடுக