செவ்வாய், 27 ஜூலை, 2010

முதல் பெண் இமாம் ரஹீல் ரசா

ரஹீல் ரசா. பெண்களும், ஆண்களும் பங்கேற்ற இருபாலர் தொழுகையை தலைமையேற்று வழி நடத்திய உலகின் முதல் இஸ்லாமிய பெண்மணி. முதல் பெண் இமாம். (இஸ்லாம் சமயத்தில் ஆண்கள் மட்டுமே தொழுகையை வழி நடத்துவர். இவர்கள் இமாம் என்று அழைக்கப்படுவார்கள்.) அண்மையில் இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டில் உள்ள இஸ்லாமிய கல்வி மையத்தில் உலகெங்கிலும் உள்ள பழமைவாதிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இந்த தொழுகை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் ரசா.


ரஹீல் ரசா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அங்கிருந்து கனடாவிற்கு குடியேறியவர். கணவர், வளர்ந்த இரண்டு மகன்களுடன் தற்போது கனடாவில் வசிக்கிறார். இவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பே கனடாவில் இருபாலர் தொழுகையை நடத்தி இருக்கிறார். என்றாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற கூட்டம் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டதால் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. ஓர் இஸ்லாமியப் பெண் மரபினை மீறி தொழுகையை நடத்தக் கூடாது என்று அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

அத்தனையும் புறந்தள்ளி விட்டு அழகாக தொழுகை கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ரஹீல். மட்டுமல்ல, பாலியல் சிறுபான்மை, புலம் பெயர்தல், மதத்தின் பெயரால் தமது குழந்தைகளை இழக்கக்கூடிய அபாயம் போன்ற பல `கடினமான' விசயங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் .

ரஹீல் ரசா "அவர்களது ஜிஹாத்... என்னுடைய ஜிஹாத் அல்ல" என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அரசியல் நிலைப்பாடு, பெண்களின் உரிமைகள், இறையுணர்வு தேடல் என்ற மூன்று பகுதிகளின் கீழ், பல நாளிதழ்களில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு சமய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்ப ரஹீல் பாடுபடுகிறார். இத்துறையில் ஆலோசகராகவும் உள்ளார். பேச்சாளர், ஆவணப்பட இயக்குனர், பத்திரிகையாளர் என பல முகங்கள் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, வடஅமெரிக்கா என்று உலகம் சுற்றியவர். பயண விரும்பி.

"பெண்கள் பார்க்கப்படத்தான் வேண்டும், கேட்கப் படக் கூடாது என்று சிறு வயதில் ரஹீலின் அம்மா சொல்வாராம். அது இவரை நிறையவே பாதித்துள்ளது. தனது நூலிலும், தன்னை பற்றிய அறிமுகத்திலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்தி தான் வளர்ந்த சூழலை ரஹீல் சித்தரிக்கிறார். பெண்கள் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ரஹீலின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, அவரது மின்னஞ்சல் முகவரியை தேடிப் பிடித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி, "ஆக்ஸ்போர்டில் தொழுகையை நடத்திய போது ஒரு பெண்ணாக எப்படி உணர்ந்தீர்கள்? எதிர்ப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். (மின்னஞ்சல் முகவரி சரியானதா, போகுமா, போய்ச் சேர்ந்தாலும் அவர் அதைப் பார்ப்பாரா, பார்த்தாலும் பதில் எழுதுவரா என்றெல்லாம் சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும்)

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ரஹீலிடமிருந்து பதில் வந்த போது மகிழ்ச்சியடைந்தேன். அவரின் தெளிவும், மனப்போக்கும், இயல்பும் அசர வைத்தன. ரஹீலின் மின்னஞ்சல் பதில் இதோ.

"கீதா, உங்களிடமிருந்து வந்த மின்னஞ்சலால் மிக்க மகிழ்வடைந்தேன். இறையுணர்வில் ஆணுக்கு பெண் சமமாக விளங்குவதை குரான் தடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டதால் அந்த தொழுகை கூட்டத்தை வழி நடத்தினேன். அப்போது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். எதிர்ப்பு சாதாரணமாக வரக்கூடியது தான். எதிர்பார்த்த ஒன்றும் கூட. ஏனென்றால், நாம் வாழ்வது ஆண் வழிச் சமுதாயம் தானே. இங்கு மாற்றம் நிகழ்வது கடினம். ஏராளமான இஸ்லாமிய இளம் பெண்கள், மசூதிகளில் (தற்போது இவர்களுக்கு அங்கு வரவேற்பு இல்லை) தமக்குரிய இடத்தைப் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன். குரானின் மையப் பொருளான மனித நீதியின் ஒரு அங்கம் தான் சமத்துவம் என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் வரும் காலங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

பிரபலமாக வேண்டும் என்பதற்காக நான் இந்த தொழுகையை நடத்தவில்லை. ஏனென்றால், உண்மையானது நண்பர்களை தேடித் தராது. அல்லாவைத்தான் வழி காட்டச் சொல்லி பிரார்த்திக்கிறேன். சக ஆண்களை நான் சார்ந்திருப்பதில்லை. கணவரும், இரண்டு மகன்களும் ஆதரவாக இருப்பது என் அதிர்ஷ்டம். ஆசீர்வாதமும் கூட. உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி - ரஹீல் ".

சிந்தனை தெளிவும், தனக்கு சரி என்று பட்டதை செய்யும் துணிவும் கொண்ட ரஹீலுக்கு ஒரு பெரிய சல்யூட்!

புதன், 14 ஜூலை, 2010

கணவர் வெளிநாட்டில் - மனைவி தமிழ்நாட்டில் விவாகரத்து கேட்கலாம்


கணவர் வெளிநாட்டில் வசித்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் மனைவி இனி இங்கிருந்தவாறே இந்து திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து கேட்க முடியும், வழக்கு தொடர முடியும். ஜூலை 12 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

முன்பு, ஒரு பெண், வெளிநாட்டில் இருக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று தமிழ்நாட்டில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் மனு செய்ய முடியாது. இது பெண்களுக்கு எதிரான ஓர் அநீதியாகத்தான் இருந்தது வந்தது. ஆனால், இந்து திருமணச் சட்டத்தின் 19 ஆவது பிரிவு தற்போது திருத்தப்பட்டுள்ளதால், குடும்ப நல வழக்கை மனைவி தொடரும் பட்சத்தில் அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தொடர முடியும். இந்தத் திருத்தத்தைக் குறிப்பிட்டுத்தான் ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம். சென்ற 2002 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைப்படக் கலைஞர் சுகன்யாவுக்கும், ஸ்ரீதரனுக்கும் அமெரிக்காவில் நியுஜெர்சியில் உள்ள பாலாஜி கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

2003 இல் இந்தியா வந்த சுகன்யா, திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. 2004 இல் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீதரனுக்கு இது பற்றி தெரியாததால் அவர் ஆஜராகவில்லை. 2004 ஜூலையில் எக்ஸ்-பார்டி ஆர்டராக சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த விவரம் தெரிந்ததும் ஸ்ரீதரன் இதை ரத்து செய்யக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டும் 2004 செப்டம்பரில் அதை ரத்து செய்து விட்டது.

இது ஒருபுறம் இருக்க, தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கு வசிப்பதால் சென்னையில் உள்ள குடும்ப நல நீதி மன்றத்தில் சுகன்யா வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அதை விசாரிக்கும் சட்ட வரம்பு (jurisdiction ) சென்னை நீதிமன்றத்துக்கு கிடையாது என்றும் ஸ்ரீதரன் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான விவாகரத்து வழக்கை இங்கு தொடர சுகன்யாவிற்கு தடை விதிக்க கோரினார்.

ஜூலை 12 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த எலிப் தர்மராவ், கே கே சசிதரன் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், இந்து திருமணச் சட்டத்தின் 19 ஆவது பிரிவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் படி, மனைவி, தான் வசிக்கும் பகுதியின் சட்ட வரம்பிற்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது. ஸ்ரீதரன் சுகன்யா இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்ததால் இந்து திருமணச் சட்டத்தில் கூறப்பட்ட சட்ட வரம்புதான் எடுத்துக் கொள்ளப்படும், இதில் கணவரது வசிப்பிடமோ குடியுரிமையோ கருத்தில் கொள்ளப்படமாட்டது, நீதிமன்றத்தின் jurisdiction -யை பொறுத்தவரை மனைவியின் வசிப்பிடம் தான் கணக்கில் கொள்ளப்படும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அயல் நாட்டில் இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய், அந்நாட்டில் ஒரு கஷ்டம் என்றால் உதவிக்கு வர ஆள் இல்லாத நிர்க்கதி நிலையால் கணவனால் கொடுமைப்படுத்தப்படும் இந்தியப் பெண்கள் ஏராளம். ஏகப்பட்ட சிரமங்களுக்கு இடையே தப்பித்து இந்தியா வந்து, அப்பெண் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பினாலும் இங்குள்ள நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யமுடியாத நிலை இதுவரை இருந்தது. கணவன் இருக்கும் அயல் நாட்டில்தான் வழக்கு தொடரவேண்டும். அயல் நாட்டுச் சட்டங்கள் சரிவர தெரியாமல், ஏராள பணச்செலவு, அலைச்சல் என்று மன உளைச்சலுக்கு ஆளான அப்பாவி பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னோடி தீர்ப்பும், இந்தச் சகோதரிகளுக்கு பெருத்த நிம்மதியைத் தந்துள்ளன என்றால் அது மிகை இல்லை.

வியாழன், 8 ஜூலை, 2010

சோசியம் பார்க்கும் ஆக்டோபஸ்


நம்மூர்காரய்ங்க கிளி சோசியம் பார்த்தா, ஜெர்மன்காரய்ங்க ஆக்டோபஸை விட்டு சோசியம் பார்க்கிறாய்ங்க. இன்னைக்கு எல்லா தமிழ் நாளிதலயும் அம்சமா போஸ் கொடுக்குற ஆக்டோபஸ் படம் தான். வேற ஒன்னுமில்லத்தா, கால்பந்து பித்தம் தலைக்கு ஏறிடுச்சு. ஜெர்மன் நாட்டுல ஓபர்ஹாசினில் இருக்குற கடல் வாழ் உயிரினங்கள் கண்காட்சியில் உள்ள ஒரு ஆக்டோபஸ், கால்பந்து போட்டியில ஜெர்மன் நாடு செயிக்குமா தோக்குமான்னு சரியா சொல்லிப்புடுதாம். இந்த சோசியகார ஆக்டோபஸ் முன்னாடி, விளையாடப் போற நாடுகளோட கொடி இருக்கிற இரண்டு பெட்டிகள வச்சா, அது செயிக்கப்போற நாட்டோட பெட்டி மேல ஏறி உக்காந்துக்குமாம். அதுக்குள்ள இருக்குற சிப்பியையும் எடுக்குமாம். எம்புட்டு மூளை!! (ஆமா ஆக்டோபஸ்க்கு மூளை எங்க இருக்கும்ண்ணே?) உலக கால்பந்து கோப்பை போட்டியில, இந்த ஆக்டோபஸ் ஜெர்மனிக்கு சொன்ன சோசியம் எல்லாம் சரியா பலிச்சிருச்சாம். இது சொன்ன மாதிரியே ஆஸ்திரேலியா, கானா, இங்கிலாந்து, அர்ஜென்டினாவை ஜெர்மனி கெலிச்சிருச்சாம். ஆக்ஸ் குட்டி சொன்ன மாரியே செர்பியா கிட்ட தோத்தும் போச்சாம். இன்னைக்கு நடக்குற அரை இறுதிப் போட்டியில யாரு செயிப்பாங்க செல்லம்னு ஜெர்மன்காரய்ங்க கேட்க, அந்த படுபாவி ஆக்டோபஸ், ஸ்பெயின் பெட்டிமேல ஏறி உட்கார்ந்து பழிப்பு காட்டிருச்சாம். உலக கோப்பை கால்பந்து போட்டியில மொதமுறையா அரை இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்குற ஜெர்மன் அண்ணெய்ங்க வயத்தில நெருப்பை அள்ளிக் கொட்டிடுச்சாம். ஆனாலும், அவிங்களுக்கு ஒரு நப்பாசை. 2008 ஆம் வருஷம், யுரோ கோப்பை பைனல்ல ஸ்பெயினை செயிச்சு ஜெர்மனிதான் சாம்பியன் ஆகும்னு சோசியம் சொல்லியிருக்கு ஆக்டோபஸ். ஆனா, சோசியம் பொய்யாப் போயி ஸ்பெயின் செயிச்சுருச்சாம். இந்த தடவையும் சோசியம் தப்பிப் போயி ஜெர்மனி செயிக்காதான்னு சப்பு கொட்டிட்டு காத்துட்டு இருக்காயிங்களாம் ஜெர்மன் அண்ணெய்ங்க. அட கிறுக்கு பய மக்கா !

திங்கள், 5 ஜூலை, 2010

Cannes விருது வாங்கிய குறும்படம்

Cannes திரைப்பட விழாவில் விருது வாங்கிய குறும்படம் என்று நண்பர் ஒருவர் இந்த படத்தை அனுப்பியிருந்தார். 50 வினாடிகளே ஓடும் இப்படம் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. யார் எடுத்தது என்ற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஒளிப்பதிவும், இசையும், நடித்துள்ளவர்களின் முகபாவங்களும் நெஞ்சை ஈர்க்கின்றன. குழந்தைகளின் அக உலகம் உன்னதமானது. அவர்கள் சக குழந்தைகளையும், மனிதர்களையும் புரிந்துகொள்ளும் விதம், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், நேசத்தோடு நடத்துவது........ இந்த சின்ன மொட்டுக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். ஓவரா பில்ட் அப் கொடுத்தா படத்தோட சுவாரஸ்யம் போயிடுமே. இதோட நிறுத்திக்கிறேன் குறும்படத்தை பாருங்கள். புரிவதில் ஐயம் இருந்தால் பின்னூட்டம் போடுங்கள். பேசுவோம். சரியா?

ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர்






இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (photo journalist ) ஹோமி வயரவாலாவுக்கு சில மாதங்களுக்கு முன் டாட்டா நானோ கார் வழங்கப்பட்டதாக செய்தி படித்தேன். அவரை பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஆசைப்பட்டு தேடினேன். ஹோமியைப் பற்றி படிக்க படிக்க வியந்துபோனேன். அவர் உத்வேகமூட்டும் ஒரு ஆதர்ச பெண்ணாக எனக்குள் தங்கிவிட்டார். 96 வயதான ஹோமி வயரவாலா தற்போது குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் தனியே வசிக்கிறார். இந்த வயதில் போய் கார் ஓட்டுவாரா என்று உங்களுக்கு சிறு சந்தேகம் வந்தாலும் அதை உடனே மாற்றி கொள்ளுங்கள். "நடப்பதை விட கார் ஓட்டுவதுதான் எனக்கு வசதி. புதிய காரை ஓட்ட ஆர்வமாக இருக்கிறேன்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஹோமி. இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபராக வரலாற்றில் இடம் பிடித்தவர் ஹோமி வயரவாலா. இவரது அரிய கருப்பு வெள்ளை படங்கள், நம் நாட்டு சுதந்திர போராட்டம், சுதந்திரம் பெற்ற தருணம், அதற்கு பிறகான அரசியல் நிகழ்வுகள், நேருவின் பதவிக் காலம் என்று சரித்திரத்தின் முக்கிய பக்கங்களுக்கு சாட்சியாக நிற்கின்றன. 1930 -களில் ஹோமி Bombay Chronicle இதழில் புகைப்பட நிருபராக பணியில் சேர்ந்தார். சிறிது காலம் அங்கு பணியாற்றிய பின், Illustrated Weekly -யில் இணைந்தார். இந்த இதழுக்காக இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளை இவர் எடுத்த படங்களை முக்கிய ஆவணங்கள் என்றே சொல்லலாம். ஹோமியின் தரமான புகைப்படங்களை பார்த்த ஆங்கிலேய அரசு, Brisitish Information Service - இன் Far Eastern Bureau - வில் சேர அழைத்தது. இதற்காக கணவர் மனேக்ஷவுடன் டெல்லியில் குடியேறினார். அந்தகக் கால பெ.. ரி...ய.. காமெராவை சுமந்து கொண்டு, புடவை அணிந்து கொண்டு சைக்கிளில் டெல்லி முழுவதும் சுற்றித்திரிந்து ஏராளமான படங்ளை எடுத்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, எலிசபத் ராணி, ஹெலன் கெல்லர், எட்மன்ட் ஹிலாரி, டென்சிங் என்று இவர் புகைப்படங்களில் இடம் பெற்ற உலக பிரபலங்கள் ஏராளம். இந்தியா பத்திரிகைகள் மட்டுமின்றி Time , Space , Life போன்ற பல சர்வதேச பத்திரிகைகளுக்கும் புகைப்படங்கள் எடுத்துள்ளார். வரலாற்றின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட ஹோமி வயரவாலா, "அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்களை விட சாதாரண மக்களையும், அவர்களது நடவடிக்கைகளையுமே எப்போதும் படம் எடுக்க விரும்பினேன்'' என்கிறார். 1970 - இல் இவர் புகைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார். கணவரும், மகனும் மறைந்துவிட்டதால் வடோதராவில் தனியே வசிக்கிறார். " நான் உதவிக்கு வேலையாட்களை எப்போதும் வைத்துக் கொள்வதில்லை. எனது பணிகளை நானே செய்கிறேன். வீட்டையும் கவனித்துக் கொள்கிறேன். சுதந்திரமாக வாழ்கிறேன்" என்று அமைதியாகச் சொல்கிறார் இந்த 96 வயது சரித்திர பெண்மணி. ஹோமி வயரவாலாவின் சாதனைகள் நெஞ்சை ஈர்க்கின்றன.... அதைவிட அவரது சிந்தனையும் மனப்போக்கும் பல பாடங்களை உணர்த்துவதாக தோன்றுகிறது எனக்கு.

வெள்ளி, 2 ஜூலை, 2010

சவரத் தொழில் செய்யும் இளம்பெண் - 2.7.10 தினத்தந்தி செய்தி


20 வயதான ஒரு இளம்பெண் வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சவரத் தொழிலில் ஈடுபட்டு தனது தாயை காப்பாற்றி வருகிறார். அவர் பெயர் தேவிபாலா. தர்மபுரி மாவட்டம் பாலகோடு அருகில் உள்ள அமானிமல்லபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணன் அவரது சகோதரரின் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்த போது தேவி பாலா பள்ளிப் படிப்பு படித்து வந்தார். சில நேரங்களில் அந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். அப்போது சவரத் தொழிலையும் கற்றுக் கொண்டார். இந்நிலையில் திடீரென அவரது தந்தை கிருஷ்ணன் இறந்து விட்டார். தேவிபாலாவின் உடன் பிறந்த இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் சென்று விட்டனர். இந்த நிலையில் தேவிபாலா தனது தாய் கமலாவை காப்பாற்ற படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையின் தொழிலான சவரத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் தேவிபாலா கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது தாயை கவனித்து வருகிறார். 12 வயது முதலே வயிற்று பிழைப்புக்காக கையில் கத்தி, கத்தரிக்கோலுடன் வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் முகச் சவரம் மற்றும் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தேவிபாலா கூறுகையில், " வறுமையின் காரணமாக எனது தந்தையின் தொழிலான சவரத்தொழிலை செய்து வருகிறேன். விரும்பி இத் தொழிலை செய்யவில்லை. 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். படிக்க வழி இல்லை. பிழைக்க வருமானம் இல்லை. இந்த நிலையில் தாயை காப்பாற்ற தந்தையின் தொழிலை செய்து வருகிறேன். இந்த தொழிலை முழுமையாக ஏற்று செய்யவில்லை. வேறு வழியின்று செய்கிறேன்" என்று கூறினார்.