ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர்






இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (photo journalist ) ஹோமி வயரவாலாவுக்கு சில மாதங்களுக்கு முன் டாட்டா நானோ கார் வழங்கப்பட்டதாக செய்தி படித்தேன். அவரை பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஆசைப்பட்டு தேடினேன். ஹோமியைப் பற்றி படிக்க படிக்க வியந்துபோனேன். அவர் உத்வேகமூட்டும் ஒரு ஆதர்ச பெண்ணாக எனக்குள் தங்கிவிட்டார். 96 வயதான ஹோமி வயரவாலா தற்போது குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் தனியே வசிக்கிறார். இந்த வயதில் போய் கார் ஓட்டுவாரா என்று உங்களுக்கு சிறு சந்தேகம் வந்தாலும் அதை உடனே மாற்றி கொள்ளுங்கள். "நடப்பதை விட கார் ஓட்டுவதுதான் எனக்கு வசதி. புதிய காரை ஓட்ட ஆர்வமாக இருக்கிறேன்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஹோமி. இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபராக வரலாற்றில் இடம் பிடித்தவர் ஹோமி வயரவாலா. இவரது அரிய கருப்பு வெள்ளை படங்கள், நம் நாட்டு சுதந்திர போராட்டம், சுதந்திரம் பெற்ற தருணம், அதற்கு பிறகான அரசியல் நிகழ்வுகள், நேருவின் பதவிக் காலம் என்று சரித்திரத்தின் முக்கிய பக்கங்களுக்கு சாட்சியாக நிற்கின்றன. 1930 -களில் ஹோமி Bombay Chronicle இதழில் புகைப்பட நிருபராக பணியில் சேர்ந்தார். சிறிது காலம் அங்கு பணியாற்றிய பின், Illustrated Weekly -யில் இணைந்தார். இந்த இதழுக்காக இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளை இவர் எடுத்த படங்களை முக்கிய ஆவணங்கள் என்றே சொல்லலாம். ஹோமியின் தரமான புகைப்படங்களை பார்த்த ஆங்கிலேய அரசு, Brisitish Information Service - இன் Far Eastern Bureau - வில் சேர அழைத்தது. இதற்காக கணவர் மனேக்ஷவுடன் டெல்லியில் குடியேறினார். அந்தகக் கால பெ.. ரி...ய.. காமெராவை சுமந்து கொண்டு, புடவை அணிந்து கொண்டு சைக்கிளில் டெல்லி முழுவதும் சுற்றித்திரிந்து ஏராளமான படங்ளை எடுத்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, எலிசபத் ராணி, ஹெலன் கெல்லர், எட்மன்ட் ஹிலாரி, டென்சிங் என்று இவர் புகைப்படங்களில் இடம் பெற்ற உலக பிரபலங்கள் ஏராளம். இந்தியா பத்திரிகைகள் மட்டுமின்றி Time , Space , Life போன்ற பல சர்வதேச பத்திரிகைகளுக்கும் புகைப்படங்கள் எடுத்துள்ளார். வரலாற்றின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட ஹோமி வயரவாலா, "அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்களை விட சாதாரண மக்களையும், அவர்களது நடவடிக்கைகளையுமே எப்போதும் படம் எடுக்க விரும்பினேன்'' என்கிறார். 1970 - இல் இவர் புகைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார். கணவரும், மகனும் மறைந்துவிட்டதால் வடோதராவில் தனியே வசிக்கிறார். " நான் உதவிக்கு வேலையாட்களை எப்போதும் வைத்துக் கொள்வதில்லை. எனது பணிகளை நானே செய்கிறேன். வீட்டையும் கவனித்துக் கொள்கிறேன். சுதந்திரமாக வாழ்கிறேன்" என்று அமைதியாகச் சொல்கிறார் இந்த 96 வயது சரித்திர பெண்மணி. ஹோமி வயரவாலாவின் சாதனைகள் நெஞ்சை ஈர்க்கின்றன.... அதைவிட அவரது சிந்தனையும் மனப்போக்கும் பல பாடங்களை உணர்த்துவதாக தோன்றுகிறது எனக்கு.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//"அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்களை விட சாதாரண மக்களையும், அவர்களது நடவடிக்கைகளையுமே எப்போதும் படம் எடுக்க விரும்பினேன்'' என்கிறார்//

ஆணாதிக்கச்சூழல் அதிகமிருந்த கால கட்டத்தில் தடைகளைக் கடந்து சாதித்த ஹோமி வயரவாலா, நுட்பமான மனித நேயச் சங்கதிகளிலும் தெளிவுடன் இருந்தது, அவரை சிறந்த ஒரு முன்மாதிரியாக அடையாளம் காட்டுகிறது.

கீதா இளங்கோவன் சொன்னது…

மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர். சாதனையாளர் என்பதையும் தாண்டி மனிதம், பெண்ணியம் தொடர்பான சரியான புரிதல் உள்ள பெண்மணியாகவே தோன்றுகிறார் ஹோமி.

கீதா இளங்கோவன் சொன்னது…

மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர். சாதனையாளர் என்பதையும் தாண்டி மனிதம், பெண்ணியம் தொடர்பான சரியான புரிதல் உள்ள பெண்மணியாகவே தோன்றுகிறார் ஹோமி.

A.Hari சொன்னது…

I very much like her success story. It is difficult to imagine how she has overcome her obstacles to achieve this. Her story is a great lesson to our youngsters who get very upset after facing minor problems in life.

கருத்துரையிடுக