புதன், 14 ஜூலை, 2010

கணவர் வெளிநாட்டில் - மனைவி தமிழ்நாட்டில் விவாகரத்து கேட்கலாம்


கணவர் வெளிநாட்டில் வசித்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் மனைவி இனி இங்கிருந்தவாறே இந்து திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து கேட்க முடியும், வழக்கு தொடர முடியும். ஜூலை 12 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

முன்பு, ஒரு பெண், வெளிநாட்டில் இருக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று தமிழ்நாட்டில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் மனு செய்ய முடியாது. இது பெண்களுக்கு எதிரான ஓர் அநீதியாகத்தான் இருந்தது வந்தது. ஆனால், இந்து திருமணச் சட்டத்தின் 19 ஆவது பிரிவு தற்போது திருத்தப்பட்டுள்ளதால், குடும்ப நல வழக்கை மனைவி தொடரும் பட்சத்தில் அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தொடர முடியும். இந்தத் திருத்தத்தைக் குறிப்பிட்டுத்தான் ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம். சென்ற 2002 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைப்படக் கலைஞர் சுகன்யாவுக்கும், ஸ்ரீதரனுக்கும் அமெரிக்காவில் நியுஜெர்சியில் உள்ள பாலாஜி கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

2003 இல் இந்தியா வந்த சுகன்யா, திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. 2004 இல் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீதரனுக்கு இது பற்றி தெரியாததால் அவர் ஆஜராகவில்லை. 2004 ஜூலையில் எக்ஸ்-பார்டி ஆர்டராக சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த விவரம் தெரிந்ததும் ஸ்ரீதரன் இதை ரத்து செய்யக் கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டும் 2004 செப்டம்பரில் அதை ரத்து செய்து விட்டது.

இது ஒருபுறம் இருக்க, தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கு வசிப்பதால் சென்னையில் உள்ள குடும்ப நல நீதி மன்றத்தில் சுகன்யா வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அதை விசாரிக்கும் சட்ட வரம்பு (jurisdiction ) சென்னை நீதிமன்றத்துக்கு கிடையாது என்றும் ஸ்ரீதரன் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான விவாகரத்து வழக்கை இங்கு தொடர சுகன்யாவிற்கு தடை விதிக்க கோரினார்.

ஜூலை 12 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த எலிப் தர்மராவ், கே கே சசிதரன் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், இந்து திருமணச் சட்டத்தின் 19 ஆவது பிரிவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் படி, மனைவி, தான் வசிக்கும் பகுதியின் சட்ட வரம்பிற்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கை தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது. ஸ்ரீதரன் சுகன்யா இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்ததால் இந்து திருமணச் சட்டத்தில் கூறப்பட்ட சட்ட வரம்புதான் எடுத்துக் கொள்ளப்படும், இதில் கணவரது வசிப்பிடமோ குடியுரிமையோ கருத்தில் கொள்ளப்படமாட்டது, நீதிமன்றத்தின் jurisdiction -யை பொறுத்தவரை மனைவியின் வசிப்பிடம் தான் கணக்கில் கொள்ளப்படும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அயல் நாட்டில் இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய், அந்நாட்டில் ஒரு கஷ்டம் என்றால் உதவிக்கு வர ஆள் இல்லாத நிர்க்கதி நிலையால் கணவனால் கொடுமைப்படுத்தப்படும் இந்தியப் பெண்கள் ஏராளம். ஏகப்பட்ட சிரமங்களுக்கு இடையே தப்பித்து இந்தியா வந்து, அப்பெண் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பினாலும் இங்குள்ள நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யமுடியாத நிலை இதுவரை இருந்தது. கணவன் இருக்கும் அயல் நாட்டில்தான் வழக்கு தொடரவேண்டும். அயல் நாட்டுச் சட்டங்கள் சரிவர தெரியாமல், ஏராள பணச்செலவு, அலைச்சல் என்று மன உளைச்சலுக்கு ஆளான அப்பாவி பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னோடி தீர்ப்பும், இந்தச் சகோதரிகளுக்கு பெருத்த நிம்மதியைத் தந்துள்ளன என்றால் அது மிகை இல்லை.

8 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பதிவு பெண் முன்னேற்றம் சார்ந்த ஒவ்வொரு அசைவையும் கவனமாகப் பதிகிறது. வாழ்த்துக்கள்.

கீதா இளங்கோவன் சொன்னது…

நன்றி தோழி. சைக்கிளில் உங்கள் முதல் பதிவான கவிதை அருமை. வலைப்பூ உலகிற்கு வருக.

498ஏ அப்பாவி சொன்னது…

இ​தையும் தங்களுக்க ​தெருவிக்க விரும்புகின்​றேன் ச​கோதரி​யே..

​பொய் வரதட்ச​ணை வழக்கில் சிக்கி ​வெளிநாட்டில் வசித்துவரும் கணவரின் ச​கோதரி தாய் ஆகி​யோரும் வரதட்ச​ணை ​கேட்டு ​​கொடு​மை ​செய்தார்கள் என்று ​பொய்புகார் ​கொடுத்து அவர்க​ளையும்

..ஏராள பணச்செலவு, அலைச்சல் என்று மன உளைச்சலுக்கு ஆளான அப்பாவி பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.,,

​கெடுமதிப்​பெண்களின் ​பொய்வழக்குகளால் இதுவ​ரைக்கம் சுமார் 1,40,000 ஆயிரம் ​பெண்கள் மட்டும் இந்தயாவல் விசார​னை ​கைதிகளாக ​கைது ​செய்யப்பட்டுள்ளனார்... (எனது தாயாருமு எனது தம்பி நண்பரின் தாயாரும் இதில் அடக்கம்)

Unknown சொன்னது…

பிரிக்கிறதா கஷ்டம், சேர்க்கிறது தாங்க கஷ்டம். என்னமோ போங்க! சும்மாவே "gap" ப்பு வுழுந்து சீ விழுந்துதான கெடக்கு.
உங்களின் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.

கீதா இளங்கோவன் சொன்னது…

நண்பர் 498 ஏ அப்பாவி அவர்களுக்கு, எனது அனுதாபங்கள். கெடுமதிப்பெண்களின் செயலை நான் நியாயப்படுத்த வில்லை.
//கெடுமதிப்​பெண்களின் ​பொய்வழக்குகளால் இதுவ​ரைக்கம் சுமார் 1,40,000 ஆயிரம் ​பெண்கள் மட்டும் இந்தயாவல் விசார​னை ​கைதிகளாக ​கைது ​செய்யப்பட்டுள்ளனார்...//
நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்று சொன்னால் அடுத்து எழுதும் போது பயன்படுத்தலாம்.
பின்னூட்டத்திற்கு நன்றி.

கீதா இளங்கோவன் சொன்னது…

@ Kanthimathi ரொம்ப சரியாய் சொன்னீங்க. கேப் எல்லா உறவுகளிலும் தானே இருக்கு காந்தி. இந்த கட்டுரை பள்ளத்தாக்கே விழுந்து பிரியறவங்களுக்கு.

//உங்களின் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றி தோழி.

பெயரில்லா சொன்னது…

இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு என எனக்குத் தோன்றியது தந்தை பெரியாரின் சில சிந்தனைகள்தான்.
"திருமணம் என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் பழக்கம். ஆணும், பெண்ணும் மனசு ஒத்துப் போய் அன்போடு, காதலோடு ஒன்றாக வாழ்ந்தாலே போதும். பிடிக்காவிட்டால் பிரிந்து போகவேண்டும். பெண்கள் என்பவர்கள் பிள்ளை பெறும் எந்திரங்கள் அல்ல. "
இந்த நடைமுறை வழக்கமாகிவிட்டால் வரதட்சிணை, பாலியல் கொடுமைக்கு முடிவு கட்ட இயலும். கற்பு என்பதை கூட பெரியார் சரியாக கணித்திருக்கிறார்.

கீதா இளங்கோவன் சொன்னது…

உங்கள் கருத்துக்களோடு முழுக்க உடன்படுகிறேன் தோழர். பெரியாரின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தினாலே பெண்ணடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். எனக்கு மிகப் பிடித்த பெண்ணியவாதி பெரியார்.

கருத்துரையிடுக